Monday, January 23, 2012

சிவ ஆகமம் – சிவாலய வழிபாட்டின் முக்கியத்துவம்

சிவ ஆகமம் – சிவாலய வழிபாட்டின் முக்கியத்துவம்


1.1 ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி கூறும் அடையாளமாகவே நாம் நிவேதனம் செய்கிறோம்; ஆபரணங்களையும் வஸ்திரங்களையும் சமர்ப்பிக்கிறோம். எல்லாருமே வீட்டில் இவ்வாறு பூஜை செய்து, திரவியங்களை ஈசுவரார்ப்பணம் செய்ய இயலாது. எனவே, சமுதாயம் முழுவதும் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் பண்ணும்படியான பொது வழிபாட்டு நிலையங்களாக ஆலயங்கள் எழுந்துள்ளன. இறைவனுக்கு நன்றி செலுத்துவதைத் தான் பரார்த்த பூஜையாக, நிஷ்காம்ய வழிபாடாக, ஆலயங்களில் செய்கிறோம்.

1.2 அரணிக்கட்டையுள் நெருப்பு மறைந்துள்ளது போல, மலரில் மணம் மறைந்துள்ளது போல ஈச்வரன் பிம்பத்தில் (லிங்கத்தில்) உள்ளார். பாலை விட, தயிரிலிருக்கும் நெய்யைக் கண்டெடுப்பது எளிது. உலகெங்கிலும் பாலில் மறைந்துள்ள நெய் போல் உறையும் இறைவன், ஆலயத்தில் தயிரினுள் மறைந்திருக்கும் நெய் போல எளிதில் நமக்கு முன் வந்து அருளக் காத்திருக்கிறான்.

1.3 ஆகமங்களில் விதித்துள்ள சிற்ப சாஸ்திரங்களுக்கொப்ப அமைந்துள்ள திருக்கோவில்களே பரம்பொருள் வீற்றிருக்கும் தேவாலயங்கள். ஆகம விதிப்படி அமையாத ஆலயங்கள் மடாலயங்கள் எனப்படும்.

1.4 சிவலிங்கம் இருக்கும் இடத்திலிருந்து நான்கு புறமும் 150 முழ தூரம் சிவக்ஷேத்ரம் ஆகும். இங்கு வசிப்பது சிவலோகவாசத்திற்கு காரணமாகும் என்று சுப்ரபேத ஆகமம் கூறுகிறது

1.5 முன் ஜன்மாவில் சிவ கைங்கர்ய உபகாரிகளாக வாழ்ந்தவர்கள், இந்த ஜன்மாவில், நல்ல உருவமும், தன ப்ராப்தியும் உடையவர்களாக காணப்படுவார்கள். சிவ தர்மத்தில் – பக்தியுடன், தன் சொத்துக்குத் தகுந்தபடி, ஆலயங்களை ஒவ்வொருவரும் செய்விக்க வேண்டும். அப்படிச் செய்தால், சிறிதாக அல்லது பெரிதாக செய்தாலும், தனவானுக்கும் ஏழ்மையானவர்களுக்கும், சமமான புண்யமே. பணக்காரராயினும், லோபமான மனஸுடன் பணத்தைக் குறைத்து சிவதர்மங்களைச் செய்பவர், அப்புண்ய பலனை அடைய மாட்டார். வாழ்வு நிலையற்றது; எனவே, ஒவ்வொருவரும் தன் சொத்தில் இரு பங்கு தர்மத்திற்கும், தனது வாழ்விற்கு ஒரு பங்குமாக ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்கிறது ஜீர்ணோத்தார தசகம்.

1.6 மனத்தை ஒருவழிப் படுத்தவும், கீழ்ப்படிவு, நீதி வழி நிற்றல், தன்னலம் மறுப்பு, பணிவு, இரக்கம் ஆகிய பல சிறந்த பண்படுகளை உண்டாக்கி வளர்க்கவும், இறுதியாக மோக்ஷ ஸாம்ராஜ்யம் அடைந்திட வழி வகுக்கவும் திருக்கோயில் வழிபாட்டைத் தவிர வேறு மார்க்கம் இல்லை.

1.7 சாதாரணமாக, நம் கைகள் இரண்டு விரிந்து, வளைந்து, பற்பல செய்கைகளைச் செய்கின்றன. இறைவனுடைய ஸந்நிதானத்தில் கும்பிடும்போது, அத்தகைய செய்கைகள் எல்லாம் ஒழிந்து, கைகள் ஒன்று சேர்ந்து குவிகின்றன. அவ்வாறு குவிந்திடும் கைகள் ஆண்டவனே! இனி என் செயல் என்று ஏதும் இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன். எல்லாம் உன் அருட் செயலே என்ற சரணாகதி தத்துவத்தை உணர்த்துகின்றது.

1.8 ஆலயங்களில் விக்ரஹ ஆராதனை முக்கியத்துவம் பெறுகிறது. உலகத்தில் சக்திகள் யாவும் உறையும் இடம் என்று பொருள் தருவது விக்ரஹம் என்ற சொல் (விஸேஷேண க்ருஹ்யதே ஸக்திஸமூஹ: அஸ்மின் இதி விக்ரஹ:) வி என்றால் விசேஷமான, சிறப்பான, இறைத்தன்மையுள்ள என்று பொருள். க்ரஹிப்பது என்றால் ஈர்த்துக்கொள்வது. பல்வேறு மந்த்ர தந்த்ர யந்த்ர வழிபாட்டு முறைகளினால் ஆராதிக்கப்படும்போது, இறையருளை முன்வைத்து, இறைத்தன்மையை ஈர்த்துத் தன்னுள் தேக்கி வைத்துக்கொண்டு, தன்னை வணங்குவோருக்கு அருள் புரியும் வல்லமை உள்ள பொருள்தான் விக்ரஹம்.

1.9 விக்ரஹங்கள் பல திறத்தன: பொருள் பொதிந்து விளங்குவன. எடுத்துக்காட்டாக, இறைவன் உருவமற்றவன்: அருவமானவன். அவனுக்கு அருவுருவமாகிய லிங்க ப்ரதிஷ்டை கருவறையிலே. அவனுக்கே, மாகேச்வர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படும் 25 உருவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அவையாவன:

1. லிங்கோத்பவர்

2. சுகாசனர்

3. சந்திதர மூர்த்தி

4. கல்யாண சுந்தரர்

5. அர்த்த நாரீச்வரர்

6. ஸோமாஸ்கந்தர் = (சிவ) ஸ: + உமா + ஸ்கந்தர் = போக மூர்த்தி

7. சக்ரவரதர்

8. திரிமூர்த்தி

9. ஹரிமர்த்தனம்

10. சலந்தராரி

16. திரிபுராரி

17. சரப மூர்த்தி

18. நீலகண்டர்

19. திரிபாதர்

20. ஏகபாதர்

21. பைரவர்

22. இடபாரூடர்

23. சந்திரசேகரர்

24. நடராஜர்

25. கங்காதரர்

இவை 25 விக்ரஹங்களுள் ஒவ்வொன்றும், பற்பல தத்துவங்களை உள்ளடக்கியவை. மீண்டும் எடுத்துக்காட்டாக, சோமாஸ்கந்த மூர்த்தியை எடுத்துக் கொண்டால், ஸச்சிதானந்தமே சோமாஸ்கந்தம் என்கிறார் காஞ்சிப் பரமாச்சாரியார். அவர் கூற்றுவது: ஸத்-சித்-ஆனந்தம் என்று சொல்வார்களே அதுதான் பரம்பொருள். இதிலே ஸத் (இருப்பு) பரமேச்வரன்; இருக்கிறோம் என்பதை உணர்ந்து சக்தியைக் காட்டுகிறது சித் அம்பாள்: இப்படி உணர்ந்ததில் பேரானந்தம் பிறக்கிறது. இந்த ஆனந்தமே சுப்ரமண்யர். சிவம் என்கிற மங்களமும், அம்பாள் என்கிற காருண்யமும் கலந்த மரம் பரம உத்க்ருஷ்டமான (உயர்வான) ஸ்தானம் அவர் (ஸுப்ரஹ்மண்யர்); ஸச்சிதானந்தத்தையே சோமாஸ்கந்தர் என்று தமிழ்நாட்டுச் சிவாலயங்களில் எல்லாம் வைத்து உற்சவம் நடத்துகிறோம்.

1.10 இறைவனை அடையும் வழிகள் ஒன்பது என்பர்: (1) ச்ரவணம் – கேட்டல், இறைவன் புகழ் கேட்டல் – உதாரணம்: ஹனுமான்,

(2) கீர்த்தனம் – பாடுதல், நாதோபாஸனை – உதாரணம்: வால்மீகி, தியாகராஜ ஸ்வாமிகள்.

(3) ஸ்மரணம் – நினைத்தல், நின்றும் இருந்தும் கிடந்தும் அவனையே நினைப்பது – உதாரணம்; ஸீதாதேவி,

(4) பாதசேவனம் – சேவித்தல் – உதாரணம்: பரதன்,

(5) அர்ச்சனம் – பூஜித்தல் – உதாரணம்: சபரி, கண்ணப்ப நாயனார், சாக்கிய நாயனார்,

(6) வந்தனம் – நமஸ்கரித்தல், வந்தித்தல் – உதாரணம்: விபீஷணன்.

(7) தாஸ்யம் – தொண்டு புரிதல் – உதாரணம்: லக்ஷ்மணன், திருநாவுக்கரசர்.

(8) ஸக்யம் – சிநேக பாவம் – உதாரணம்: சுக்ரீவன், அர்ஜுனன், சுந்தரர்.

(9) ஆத்ம நிவேதநம் – தன்னையே அர்ப்பணித்தல் – உதாரணம்: ஜடாயு.

இந்த ஒன்பது வழிகளுள் ஏதாவது ஒன்றை உறுதியாகப் பற்றுவதே இறைவனை அடைவதற்கு போதுமானது. இவற்றுள் கடைசி இரண்டைத் தவிர, ஏழு முறைகளில் வழிபட ஆலயங்களே வகை செய்வது குறிப்பிடத்தக்கது.

1.11 இவ்வாறு ஆலய வழிபாட்டை மையமாக வைத்து அமைக்கப்பட்ட வாழ்க்கை முறையே சிவதன்மம் ஆகிறது. சிவதன்மம் என்றால் சைவ ஒழுக்கம் என்று பொருள். சிதம்பரம் மறைஞானதேசிகர் (கி.பி.1560) சிவாகம பரிபாஷா மஞ்சரி என்ற வடமொழி நூலில் சிவதன்மம் பத்துக் கோட்காடுகளைக் கொண்ட நெறி என்கிறார்:

1. அஹிம்சை. 2. தயை, 3. சத்யம், 4. அடக்கம் 5. வளம், 6. புலனடக்கம் 7. எளியோர்க்கு வழங்குதல், 8. தியாகம், 9. ஜபம், 10. தியானம் – அல்லது

1. அஹிம்சை, 2. சத்யம், 3. பிறர் பொருள் விழையாமை, 4. சிற்றின்பம் துறத்தல், 5. அவா ஒழித்தல், 6. க்ரோதம் தவிர்த்தல், 7. பெரியோரைப் போற்றுதல், 8. தூய்மை, 9. துயறுற்றலும் மகிழ்வுடன் இருத்தல், 10. நேர்மை என்றபடி. இக்கோட்பாடுகள் அனைத்தும் ஆலய வழிபாட்டு நெறிக்கும் இன்றியமையாததாக இருப்பது கவனிக்கத் தக்கது.

1.12 எனவே, ஆலயத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கையில், நீறு இல்லா நெற்றி பாழ்; சிவாலயம் இல்லா ஊர் பாழ்; சிவபூஜை இல்லா ஜன்மம் பாழ்; சிவனை அடையா வித்யை பாழ் என்று ஆகமங்கள் வலியுறுத்துகின்றன.

2 comments:

  1. Very nice. Good information. Pls do keep posting lot of informations like this. one fine day someone like me will see it and may send to lot of devotees. and which will be useful for future generation. Gr8 job. do continue...

    ReplyDelete
    Replies
    1. Excellent. I enjoyed reading your blog. quiet an information. Will you pls tell us the meaning of the components of siva temple and the kriyas.
      kmani52@gmail.com.
      K. Mani. Science Writer

      Delete